அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக வேட்பாளராக கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.
இதையடுத்து அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னரில் இன்று காலை திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பின் காலையில் அங்கிருந்து வேட்பு மனுதாக்கல் செய்ய அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு செந்தில்பாலாஜி ஊர்வலமாக நடந்தே சென்றார்.
இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நடந்தே சென்றதால் அரவக்குறிச்சியே திருவிழாகோலம் பூண்டது. அதுமட்டுமின்றி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் திரளானோர் இந்த மனு தாக்கலின்போது இருந்தனர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் செந்தில்பாலாஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடித்து வெளியே வந்த செந்தில்பாலாஜி அந்த தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என்று உறுதி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பொன்முடி, கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கே.சி.பழனிசாமி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.