மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கலிங்கப்பட்டியில் வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்து ஜனநாயக படுகொலை செய்து விட்டது. ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடக்கிறது. அதை மட்டும் ஏன் நிறுத்தவில்லை? பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மத்திய அரசின் அங்கமான சி.பி.ஐ. புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தமிழக அரசு காவல்துறை ஆகியவை இணைந்து ஒருதலைபட்சமாக சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகின்றன.
தேனியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரின் பணம் வெள்ளமாக பாய்கிறது என்று தகவல்கள் வந்தபடி இருந்தது. அங்கு எந்த துறையும் சோதனை நடத்தவில்லை. மற்றவர்கள் எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜனநாயகம் தழைக்கும் என்றார்.