காஞ்சிபுரத்தில் நடந்த பட்டாசு வெடி விபத்து தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்தார்.
2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தார். பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு சட்டமன்ற உறுப்பினர் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய பாமக ஜி.கே.மணி, பட்டாசு வெடி விபத்துகள் தொடர்கதையாக மாறிக்கொண்டு இருப்பதால் இதைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இனி பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகையின் தீர்மானத்திற்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்தார். அதில் அவர், பட்டாசு ஆலை விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஒரு சில பட்டாசு ஆலைகள் லாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பணி செய்யக்கூடிய காரணங்களால் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.