
பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, இன்று திருச்சி விமானநிலையத்தில் பேசும் போது, 'மகா கும்பமேளாவிற்கு ரயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்.
கும்பமேளாவிற்கு ரயில் சென்று வந்தவர்கள் சொல்லொண்ணா சிரமத்தை அனுபவித்தார்கள். ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் பயணிகள் ரயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பிரக்யாராஜுக்கு சென்று ரயிலில் மீண்டு வரமுடியாத நிலையில் அவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்து, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது ரயில்வே அமைச்சகம். நிலை இவ்வாறு இருக்கையில் பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.