நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்றியது.மத்தியில் பாஜக கூட்டணி 351 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது.அதிமுக, பாஜக கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். இதில் பாமக கட்சிக்கு 7 இடங்களும்,பாஜக கட்சி 5 இடங்களும்,தேமுதிக 4 இடங்களும் போட்டியிட்டனர்.இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமக,பாஜக,தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாதது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![dmdk](http://image.nakkheeran.in/cdn/farfuture/78YXs_iDRbCVfheffGMNiCORqQljlIHpU25qD_S11BQ/1558769446/sites/default/files/inline-images/246.jpg)
இதில் தேமுதிக கட்சி தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருவதால் கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேமுதிக கட்சி 2005ஆம் ஆண்டு தொடங்கி 2006ஆம் ஆண்டு தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் 8.38 சதவிகித ஓட்டு வாங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.அதற்கு அடுத்து நடந்த 2009 ஆண்டு தேர்தலில் 10.3% ஓட்டு வாங்கி தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சி அளவுக்கு உயர்ந்தது. 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டு 2.39% ஓட்டுகள் மட்டுமே பெற்றது.இந்த நிலையில் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த தேமுதிக வெறும் 2.19 சதவிகித ஓட்டுகள் மட்டுமே வாங்கியுள்ளது.
இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக 3 சதவிகித ஓட்டுகளுக்கும் குறைவாக பெற்றதால் தேமுதிகவுக்கு மாநில அந்தஸ்த்து பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வரும் தேர்தலில் முரசு சின்னம் கிடைப்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.ஒரு வேளை முரசு சின்னம் கிடைக்கவில்லை என்றால் இனி வரும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் சூழல் தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது.இது தேமுதிக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.