தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்குவது சமூக அநீதி என்றும், மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சரி தான் என்றும் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நடைமுறைக்கு சாத்தியமற்ற செயலை மாணவர்கள் செய்தே தீர வேண்டும் மத்திய அரசு கட்டாயப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு உள்ளூரில் தேர்வு மையம் ஒதுக்குவதற்கு பதிலாக கேரள மாநிலம் எர்ணாகுளம், இராஜஸ்தான் மாநிலம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மாநிலம் விட்டு, மாநிலம் சென்று நீட் தேர்வில் பங்கேற்பதில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதால், தமிழகத்திலேயே அவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று நீட் தேர்வுகளை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அண்மையில் ஆணையிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் நியாயமானது; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கம் கொண்டது. இத்தீர்ப்பை செயல்படுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுதுவதை உறுதி செய்திருக்க வேண்டியது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கடமையாகும். இதில் எந்த சிரமமும் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் சுமார் 200 பேருக்கு மட்டுமே வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இரு தேர்வு மையங்களின் கொள்ளளவை தலா 100 இருக்கைகள் வீதம் அதிகரித்தால் போதுமானது. ஆனால், சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான இந்த நடவடிக்கையைக் கூட செய்வதற்கு மத்திய அரசின் கல்வி வாரியம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை வாங்கியுள்ளது. இது சமூக அநீதி.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளத்துக்கும், இராஜஸ்தானுக்கும் சென்று நீட் சென்று தேர்வு எழுதுவது எளிதான காரியம் அல்ல. தொடர்வண்டியில் இரு நாட்கள் பயணம் செய்து தான் இராஜஸ்தான் செல்ல வேண்டும். பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் தாங்க முடியாது. இதையெல்லாம் விட இராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களால் இதை நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் அவர்களுக்கு உடல்நலன் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இராஜஸ்தான் சென்று தான் தேர்வெழுத வேண்டும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதும், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்களாகும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சிக்கல் முதன்முதலில் தெரியவந்ததுமே இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத தமிழக அரசு, இப்போது இவ்விஷயத்தில் எதையும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டது. தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்தவித கடமையுணர்வும், பொறுப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இராஜஸ்தானில் தான் நீட் தேர்வு எழுத வேண்டுமென்றால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும் வாய்ப்புள்ளது.
எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்த வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் இராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களை அழைத்துச் சென்று வர பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.