இந்தியாவை பொறுத்தவரை 1.88 கோடிக்கும் அதிகமான மக்கள் ட்விட்டர் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகமாகவும் ட்விட்டர் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக அரசியல் கட்சியினரின், திரைப் பிரபலங்கள் போன்றோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப், கங்கனா ராணாவத், ராகுல்காந்தி, 6க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அப்போது மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சொன்னது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் செயல் என்றும் காங்கிரஸ் கூறியது.
பொதுவாக ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறது என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பொதுமக்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது, சர்ச்சையான பதிவுகளைப் பதிவிட்டு இருபிரிவு மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவது, சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டால் கணக்கு 24 மணி நேரத்துக்கு முடக்கப்படும். ஒரு ஐடி ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டாலும் அது மீட்கப்படும் வரை இடைநீக்கம் செய்யப்படும். ட்விட்டர் விதிகளை மீறி ஒரு ஐடி இயங்குகிறது என்றாலும் அந்த ஐடி முடக்கப்படும். தவறான செயல்களில் ஈடுபடும்போது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கணக்குகள் நிறுத்தி வைக்கப்படும்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 20 பேரின் ட்விட்டர் ஐடிக்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி ஆளும் மாநில அரசுகளையும் மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான். தான் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்தும், கட்சி சார்ந்த அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுக்கு எதிரான தனது கண்டன அறிக்கைகளையும் ட்விட்டரில் பதிவிடுகிறார். இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கட்சியினர் 20 பேரின் ஐடிக்களும் முடக்கப்பட்டுள்ளன.
சைபர் க்ரைம் வல்லுநர்கள் இது குறித்து கூறுகையில், ‘ட்விட்டர் கணக்கை முடக்க மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு குறிப்பிட்ட 10 நிறுவனங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட ஐடிக்கள் குறித்து ட்விட்டரிடம் புகார் அளித்தால் புகாரின் மேல் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட கணக்கை முடக்க வேண்டும் என்பது விதி. ஐடியின் உரிமையாளர் ட்விட்டருக்கு தனது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லலாம். கோரிக்கையை ஏற்று கணக்கை முடக்கியதில் இருந்து நீக்கவும் முழுமையாக கணக்கை முடக்குவதும் ட்விட்டரின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்கின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் தமது தரப்பு நியாயத்தை ட்விட்டருக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு ட்விட்டர் பதில் அளிக்கும் பட்சத்தில் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படலாம்.