அடுத்த 8 மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும். கேள்விகள் கேட்டுக்கொண்டே தான் இருப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவின் அடுத்த பாகத்தை வெளியிட்ட பின், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்களில் ஏதேனும் தவறுகள் நடந்துள்ளதா என்பது குறித்தான பைல்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதில் யார் இருந்தாலும் கவலைப்படப் போவதில்லை. இது யாருக்கும் எதிரானது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற அரசியலை செய்துகாட்ட முடியும் என்ற முயற்சியைத்தான் நாங்கள் எடுக்கிறோம். ஊழல் என்று வந்த பின் நண்பர்கள், எதிரிகள் என பார்க்கவில்லை. நாங்கள் இங்கு யாரையும் பங்காளிகள் என சொல்லவில்லை. எங்களுக்கு எல்லோரும் எதிரிகள் தான்.
ரஃபேல் வாட்சில் சீரியல் நம்பர் மாறியிருப்பதாக சொல்கிறார்கள். என் கையில் இருக்கும் வாட்ச் ஜிம்சனில் கொடுத்து கேட்டுப்பாருங்கள். வாட்சில் உள்ள நம்பர் தான் சரியான நம்பர், கையில் இருக்கும் அழுக்கு வாட்சில் சேர்ந்திருக்கிறது. இதில் 147 தான் இருக்கிறது. மேடையில் படிக்கும் போது அழுக்கு இருக்கிறதால் தெரியவில்லை. இப்பொழுது நீங்கள் படிக்கும் போதே ஒரு நிமிடம் கஷ்டப்பட்டீர்கள் தானே. 147 தான். பில்லில் போட்டிருப்பது தான் வாட்ச் நம்பர்.
டீசல் கட்சி கொடுக்கிறது, வீட்டு வாடகை நண்பர்கள் கொடுக்கிறார்கள், 3 பிஏ விற்கு 3 கம்பெனிகளில் இருந்து சம்பளம் போடுகிறார்கள். என்னால் அதையெல்லாம் செய்ய முடியாது. மாநிலத் தலைவராக இருக்கும் வரை சிலரின் உதவியை வைத்து தான் நான் செய்கிறேன். நான் கொள்ளை அடித்து சொத்து சேர்த்திருந்தால் அந்த பணத்தில் கொடுப்பேன். கொள்ளை அடித்து சொத்து சேர்க்கவில்லையே.
தமிழகத்தின் வளர்ச்சி பற்றியெல்லாம் பேச வேண்டாம். ஊழலைப் பற்றி பேசுவோம். 2024 பாராளுமன்றத் தேர்தல் என்பது ஊழலை மையமாக வைத்து நடக்க வேண்டும். 49 ஆயிரம் பேர் எதற்கு அந்த நடைபயணத்திற்கு பதிவு செய்ய வேண்டும். இதில் இருந்து பின் வாங்கப்போவது கிடையாது. அடுத்த 8 மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும். கேள்விகள் கேட்டுக்கொண்டே தான் இருப்போம்” எனக் கூறினார்.