தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போட்டியிடும் தொகுதிகள் இறுதியான நிலையில் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் தொடர்ச்சியாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர் (தனி)- செல்வப்பெருந்தகை, சோளிங்கர்- முனிரத்தினம், ஊத்தங்கரை (தனி)- ஆறுமுகம், கள்ளக்குறிச்சி (தனி)- மணிரத்தினம், ஓமலூர்- மோகன் குமாரமங்கலம், ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவேரா, உதகமண்டலம்- கணேஷ், கோவை (தெற்கு)- மயூரா எஸ்.ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை- கே.தென்னரசு, விருத்தாச்சலம்- எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி- ராமச்சந்திரன். காரைக்குடி- எஸ்.மாங்குடி, மேலூர்- டி.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- மாதவ ராவ், சிவகாசி- அசோகன், திருவாடானை- கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம்- அமிர்தராஜ், தென்காசி- பழனி நாடார், நாங்குநேரி- ரூபி.ஆர்.மனோகரன், கிள்ளியூர்- ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.