அதிமுகவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உறுப்பினர் படிவங்களை மாவட்ட செயலாளர்களிடம் கொடுத்து துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி மாநாடு நடைபெற்றுள்ளது. சமூகநீதியைப் பற்றி பேசுவதற்கு முகாந்திரம் வேண்டும். ஆனாலும் அந்த நிகழ்வில் மாபெரும் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஊர் பெயர் தெரியாத தலைவர்கள் தான் கலந்து கொண்டார்கள். இது எல்லாம் ஒரு பில்டப். சமூகநீதிக்கு சொந்தம் கொண்டாடக்கூடிய இயக்கம் அதிமுக தான்.
அதிமுகவில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் அப்படியே இருக்கிறார்கள். இன்று உறுப்பினர் படிவங்கள் புதிதாக கொடுத்துள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும். புதிய உறுப்பினர்களாக எப்படியும் 2 கோடி பேர் சேருவார்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
கட்சி ஆட்சிக்கு வருகிறது. கட்சி சார்பாக முதல்வர் ஆட்சி செய்கிறார். முதல்வர் அந்த கட்சியை கட்டுப்படுத்த வேண்டும். இன்று அதன் வெளிப்பாடு தான் சொந்த கட்சியினரே மேயரை மாற்ற சொல்வது, திமுகவினரே வெளிநடப்பு செய்வது, அவர்களே உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது இவையெல்லாம் விநோதமான கேலிக்கூத்தான விஷயங்கள்.
அதிமுக, பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக தலைமையின் கீழான கூட்டணியில் பாஜக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி குறித்து ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுக்கும் போது கூட கூட்டணியில் இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். பாஜகவை பொறுத்தவரை அதன் தேசிய தலைமைதான் கூட்டணி குறித்து முடிவு செய்யும். அவர்களைப் பொறுத்தவரை மோடியும் அமித்ஷாவும் அதை உறுதி செய்கிறார்கள். நாங்கள் அதைத்தான் பார்க்க முடியும். மாநிலத் தலைவர் சொல்லும் கருத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜகவினர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.