வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வாசித்தார். திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று (13.03.2021) அண்ணா, கலைஞர் நினைவிடங்கள் உள்ள மெரினாவிற்குச் சென்று அங்கும் தேர்தல் அறிக்கையை வைத்து திமுக தலைவர் மரியாதை செலுத்தினார். அதனையடுத்து அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தலை அறிக்கையின் முதல் பிரதியை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
500 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ள திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்: திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், புகார்கள் குறித்து மனுக்கள் பெறப்பட்ட 100 நாட்களில் தீர்வு, சட்டப்பேரவை நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், சொத்துவரி உயர்த்தப்படாது, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், ரேஷனில் உளுத்தம் பருப்பு விநியோகிக்கப்படும், இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அதிகரிக்கப்படும், இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடியும் ஒதுக்கப்படும், மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை கொடுக்கப்படும், பத்திரிகையாளர்களுக்குத் தனி ஆணையம் உருவாக்கப்படும், முதற்கட்டமாக 500 இடங்களில் 'கலைஞர் உணவகம்' உருவாக்கப்படும், நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகம் உருவாக்கப்படும், மகளிருக்கான பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும், தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை, சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும், பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும், வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வேதேச மையம், அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படும், குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி, முதல் பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை, நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றப்படும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் என நீளுகிறது திமுக தேர்தல் அறிக்கை.