கரோனோ வைரஸ் பரவலால் இந்தியாவில் தொடர் ஊடரங்கு அமுலில் உள்ளது. தமிழகத்தில் தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் இன்னும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனோ பயத்தில் பலரும் சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வதால் முறையான பாதுகாப்பு இல்லாமல் தனிமைபடுத்தல் இல்லாமல் இருந்தால் மீண்டும் தமிழகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
நமக்கு கரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார் கரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சிவப்பு பகுதியில் இருந்து ஆரஞ்சு பகுதிக்கு தற்போது மாறியுள்ளது. இந்த ஊரடங்கில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள காவிரி கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க சென்றவர்களை போலிஸார் விரட்டியடித்து வீட்டில் வைத்து கொடுங்கள் என்று கடுமையான நெருக்கடி காட்டினார்கள்.
ஆனால் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இறந்து போன தன்னுடைய மனைவிக்கு திதி கொடுப்பதற்காக இன்று திடீர் என காலையில் 6 கார்களுடன் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வந்து இறங்கினார். திடீர் என கார்கள் அதிரடியாக வந்து இறங்கியதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
காரில் வந்தவர்கள் அனைவரும் அம்மா மண்டபம் படித்துறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அஸ்தி கரைப்பு, காரியம் எல்லாம் நடைபெற்றது. போலிஸ் பாதுகாப்புடன் பூஜை முடிந்தவுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாவாசை அன்று திதி கொடுக்க வந்த பொதுமக்களை போலிஸ் அடித்து விரட்டியது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் சட்டம் அனைவருக்கும் சமமானது தானே...? என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார். மேலும், தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது முதல் மனைவி காலமானார். இதனை தொடர்ந்து இன்று 03.05.2020ம் தேதி காலை சுமார் 07.30 மணிக்கு திருச்சி, ஸ்ரீரங்கத்திலுள்ள அம்மாமண்டபத்திற்கு சுமார் நான்கைந்து கார்களில் வந்தவர் மறைந்த தனது மனைவிக்கு திதி கொடுத்து சென்றுள்ளார்.
இதற்கு முன்பு கரோனா காலத்தில் அமாவாசையன்று திதி கொடுத்தவர்கள் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால் அமைச்சர் மீது உரிய சட்டபடியான நடவடிக்கை வேண்டி தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் முலமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.