தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. ஒருகட்டத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்தும் தனிப்பட்ட தலைவர்கள் குறித்தும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார். மேலும், அமித்ஷா தரப்பிலிருந்து அதிமுகவை விமர்சிக்கக் கூடாது என்ற உத்தரவு தமிழக பாஜகவினருக்கு போடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் இரு கட்சிகளின் மோதல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், அதிமுகவுக்கு வசீகரமும் சரியான தலைமையும் தற்போது இல்லை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்றத் தயாராக இருக்கிறோம். அதில் எந்த மாறுபாடும் இல்லை. அதிமுகவை விமர்சித்துப் பேசிய எஸ்.ஆர்.சேகரை அண்ணாமலை கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்கவில்லை என்றால் அதிமுக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். ஒரு கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் அமித்ஷாவை நாங்கள் சென்று பார்த்தோம். அதன்பிறகு இந்த மாதிரியான விமர்சனங்களை எப்படி அனுமதிக்க முடியும். இதற்கு அண்ணாமலைதான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.