‘தமிழகத்தின் லேடியா; குஜராத்தின் மோடியா’ என சவால்விட்ட ஜெயலலிதாவின் படத்தைவைத்து ஆட்சி நடத்தும் அதிமுக அரசு, மோடியோடு கைகோர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பது வெட்கமாக இல்லையா? இதே ஜெயலலிதாதான் சுப்பிரமணிய சாமியை வைத்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தினார். அப்படிபட்ட பாரதிய ஜனதா கட்சியுடன் தற்போது சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளது வெட்க கேடு என திருவாரூரில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் நடந்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, “தமிழகத்தின் லேடியா; குஜராத்தின் மோடியா.? என கூறிய ஜெயலலிதாவின் படத்தைவைத்து ஆட்சி நடத்தும் அதிமுக அரசு, தற்போது மோடியோடு கைகோர்த்து இருப்பதற்கு வெட்கமாக இல்லையா? இதே ஜெயலலிதாதான் சுப்பிரமணிய சாமியை வைத்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தினார். இந்த பாரதிய ஜனதா கட்சியுடன் தற்போது சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளனர்.
இந்துத்துவா, உலகமயம், தனியார்மயம், தாராளமயம், ஒரு நாடு, ஒரு கலாச்சாரம், ஒரு பண்பு என்பதுதான் பாரதிய ஜனதாவின் லட்சியம், கொள்கை. அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார் எடப்பாடி. தாய் மொழியை மதிக்காத அதிமுக ஆட்சி இருப்பதால் இந்தியை திணிப்பதற்கு மோடி முனைந்து கொண்டிருக்கிறார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப்பதை திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி. கலைவாணனால் அது அழிக்கப்பட்டு, தமிழில் பெயர்ப்பலகை எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது” என அனல் பறக்க பேசினார்.