Skip to main content

எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஈர்க்க நடிகை லதாவுக்கு அசைன்மெண்ட்! -எடப்பாடி முடிவு!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

 

தமிழகத்திற்கு அந்நிய தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வெளிநாடு செல்லும் முன்பு  பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், ச.ம.க.தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள்  பலரும்  முதல்வரை சந்தித்து வெளிநாட்டு பயணம் வெற்றியடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

 

Actress latha - edappadi palanisamy


அந்த வரிசையில், எடப்பாடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பழம்பெரும் நடிகையும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியுமான நடிகை லதா.  காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரின் ஆதரவாளராக இருந்தாலும் காங்கிரசில் இணையாமல் அதிமுகவில் ஐக்கியமாகியிருந்தார்.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அரசியலில் தீவிரம் காட்டி வந்தார் லதா. 

இருப்பினும் அவருக்கான உரிய இடம் கிடைக்காமலே இருந்தது. இந்த நிலையில், கட்சியில் ஒதுங்கியிருக்கும் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்களை அரவணைத்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சமீபத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்திருந்தார் எடப்பாடி. இந்த சூழலில், வெளிநாடு பயணம் வெற்றியடைய தங்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என எடப்பாடியிடம் நேரம் கேட்டிருந்தார் லதா. எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு யோசனையை எடப்பாடி வைத்திருந்ததால் நடிகை லதாவுக்கு உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்டது. 


 

முன்னாள் அமைச்சர் பொன்னையனுடன் சென்று எடப்பாடியை சந்தித்த லதா, அவருடன் 15 நிமிடம் பேசிவிட்டுத் திரும்பினார். இந்த சந்திப்பு லதாவுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இது குறித்து லதாவுக்கு நெருக்கமான எம்.ஜி.ஆர். விசுவாசிகளிடம் நாம் பேசியபோது , ‘’அதிமுகவின் ஆணிவேராக இருப்பவர்கள் எம்.ஜி.ஆர். விசுவாசிகள். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவரது விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டே வந்தனர். புறக்கணிக்கப்பட்டாலும் அவர்கள் அதிமுகவிலேயே இருந்தார்களே தவிர மாற்று கட்சிக்கு இடம்பெயரவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்தவர்கள் பலர், பதவிகளை அனுபவிப்பதற்க்காக  திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளுக்கு தாவினார்கள். 


 

ஆனால், எம்.ஜி.ஆர். தொண்டர்கள் யாருமே போகவில்லை. இரட்டை இலை மீதான விசுவாசம் அவர்களுக்கு அப்படியேதான் இருக்கிறது. சசிகலா, தினகரன் தரப்பினரை அதிமுகவில் மீண்டும் நுழையவிடாமல் தடுக்க நினைக்கும் எடப்பாடி, அதிமுகவின் ஆகப்பெரிய சக்தியாக தன்னை நிரூபிக்க நினைக்கிறார். அதற்கு கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம்தான் வலிமையடைய முடியும் எனவும் கருதுகிறார் எடப்படி பழனிச்சாமி. 
 

அந்த வகையில், கட்சிக்கு ஒரு பெண் பிரபலம் தேவை என நினைக்கும் அவர், திரையுலகில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட நடிகை லதாவை மீண்டும் பரபரப்பு அரசியலுக்கு கொண்டு வந்து அவர் மூலம் எம்.ஜி.ஆர்.விசுவாசிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு அச்சாரமாக, வெளிநாட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்பியதும், நடிகை லதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் அசைன்மெண்ட் அவரிடம் தரப்படலாம் ‘’ என்கிறார்கள் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள்.    

 

சார்ந்த செய்திகள்