தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழகம் முழுக்க 234 தொகுதிகளில் இருந்து மொத்தம் 7,255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 4,526 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டும், 2,727 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் தமிழ் தேசிய புலிகள் எனும் கட்சியை துவங்கியவர் மன்சூர் அலிகான். அவரது கட்சியை பதிவு செய்வதில் தாமதமானதால், இந்தத் தேர்தலில் கட்சியின் சார்பாக போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என அறிவித்தார். அதன்படி கோவை தொண்டாமுத்துர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். அறிவித்தப்படி வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். மேலும் அத்தொகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
தற்போது திடீரென இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக திமுக நேரடியாக களத்தில் உள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். திமுக சார்பில் திமுக சுற்றுச்சூழல் துறை செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.