Published on 28/08/2019 | Edited on 28/08/2019
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தது. காஷ்மீர் மாநிலம் தொடர்பான அனைத்து மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், இந்திய குடியரசுத்தலைவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். இதனால் காஷ்மீர் மாநில மசோதாக்கள் அனைத்தும் சட்டமானது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 31- ஆம் தேதி முதல் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் உள்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது காஷ்மீர் பிரச்னை குறித்தும் முதலீடு செய்வது குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது. எனவே ஜம்மு காஷ்மீரில் புதிய முதலீடுகளை செய்யவும், அங்கு நலத்திட்டங்களை கொண்டு வரவும், புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவும் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள். காஷ்மீரில் மத்திய அரசு செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது. அதேபோல் காஷ்மீரில் பாதுகாப்பை குறைப்பது தொடர்பான ஆலோசனையும் இன்று நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.