போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது. எனவே, தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது, அந்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், ‘அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.