Skip to main content

அண்ணன் திமுக, தம்பி அதிமுக..! தொகுதி யாருக்கு..? 

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

Siblings contest in same constituency at dindigul aandipatti


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியிகள் பரபரப்பாகின. பெருத்த எதிர்பார்ப்புக்குப் பிறகு அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி தொகுதிகளையும், கட்சி வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. 

 

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றம் தொகுதி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்ற பெருமையைக் கொண்டது. இந்தத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா பக்கம் சென்ற தங்க தமிழ்செல்வன், தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டது. அதை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து அவருடைய உடன் பிறந்த அண்ணன் மகாராஜன் திமுக சார்பில் போட்டியிட்டார். 

 

Siblings contest in same constituency at dindigul aandipatti

 

எதிரும் புதிருமாக உள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதியதில் அப்போது ஆண்டிப்பட்டி தொகுதி பரபரப்புக்கு உள்ளானது. அந்தத் தேர்தலில் 12 ஆயிரத்து 363 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மகாராஜன் வெற்றிபெற்று தம்பி லோகிகராஜனை தோல்வியடையச் செய்தார். இதையடுத்து 20 ஆண்டுகள் அதிமுக வசமிருந்த ஆண்டிப்பட்டி தொகுதியை திமுக கைப்பற்றியது.

 

Siblings contest in same constituency at dindigul aandipatti

 

இந்த நிலையில், வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த லோகிராஜன் மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுக சார்பில் ஆண்டிபட்டி சிட்டிங் எம்.எல்.ஏ.வான மகாராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். 

 

இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் அண்ணன் தம்பி இருவரும் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த ஆண்டிபட்டி தொகுதியைத் தட்டிப்பறித்த திமுக, அதை தக்கவைத்துகொள்ள தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் இழந்த ஆண்டிபட்டி தொகுதியைக் கைப்பற்ற அதிமுக களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இப்படி அண்ணன் தம்பியாக இருந்தாலும் அரசியல் களத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பது, மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்