சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்களை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் அதிகாரிகள் பலரும் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில் ஊரடங்கும், மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு தடையும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதவருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத்.
அவரிடம் நாம் பேசியபோது, ’’திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு தொகுதியில் இருக்கிறது சிப்காட் தொழிற் பேட்டை! இந்த சிப்காட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் சைனா மற்றும் தைவான் நாடுகளை சேர்ந்த செருப்பு தயாரிக்கும் நிறுவனங்கள்தான் பிரதானவை. இந்த நிறுவனங்களில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 27,000 பணியாளர்கள் இந்த சிப்காட்டில் வேலை பார்க்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு சிப்காட் வளாகம் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி பணி புரிய வைக்கும் 27 ஆயிரம் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. சைனா மற்றும் தைவான் கம்பெனி நிர்வாகம் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பேசிய நான், கொரோனா பரவலுக்கு காரணம் சிப்காட் வளாகம் தான் . மூன்று வாரங்களுக்கு வளாகத்தை லாக் டவுன் செய்யுங்கள் என வலியுறுத்தினேன். ஆனால், அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. ஒரே ஒரு நாள் நடக்கும் திருவண்ணாமலை கிரி வலத்தால் தொற்று பரவும் என சொல்லி கிரிவலத்துக்கு தடைப்போட்ட கலெக்டர், தொற்று பரவலுக்கு காரணமாக இருக்கும் சிப்காட் வளாகத்தை மூட முயற்சிக்கவில்லை. சைனா மற்றும் தைவான் நிறுவனங்களின் பிஸ்னெஸ் பாதிக்கும் என மாவட்ட நிர்வாகம் கருதியிருக்கலாம். மாவட்ட நிர்வாகத்துக்கும் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களும் ஏதோ ‘நட்பு’இருக்கிறது.
இந்த சூழலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் துவங்கி விட்டது. இதனால் மாவட்டத்தையே மூன்று வாரங்களுக்கு லாக் டவுன் செய்தால்தான் தொற்றை குறைக்க முடியும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்க காரணம் சிப்காட் வளாகமும், அதற்கு துணைப் போகும் மாவட்ட நிர்வாகமும்தான் ! அதனால், சிப்காட் வளாகத்தை இழுத்து மூட வேண்டும் ‘’ என ஆவேசப்படுகிறார். இது குறித்துதான் முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.!