சிதம்பரம் மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து நேற்று இரவு சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டலின் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
இதில் திமுக. தலைவர் முக.ஸ்டாலின், நடைப்பெற இருக்கிற மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மதவெறி பிடித்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கலைஞர் ஆட்சி இருந்தது. ஆனால் ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு அடையாளமாக தற்பொழுது உள்ள முதல்வர் எடப்பாடி ஆட்சி உள்ளது.
தமிழகத்திற்கு தற்பொழுது வாரம் தோறும் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார். ஆனால் கஜா புயல் பாதிக்கப்பட்ட போது மோடி வந்தாரா, இல்லை. தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியாவது தந்தாரா, இல்லை. மோடி ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று கூறினார். யாருக்காவது ஒருவருக்கு மத்திய அரசின் மூலமாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா. வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறினாரே செய்தாரா. குறைந்தது ரூ 15 ஆயிரம் அல்லது 15 ரூபாய், 15 பைசாவது வந்துள்ளதா, மோடி ஏழை தாயின் மகன் என்கிறார். டீ வித்துதான் பிரதமராக வந்தேன் என்கிறார். டீ விற்பது நல்ல தொழில் அது கேவலம் அல்ல. ஆனால், ஏழைகளைப் பற்றி நினைக்காமல் கார்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் தன்னை ஒரு காவலாளி என்கிறார். ஆமாம், நீங்கள் எடப்பாடி ஆட்சிக்கு காவலாளி. நீங்கள் காவலாளி அல்ல களவாணி. தமிழகத்தில் நடக்கும் அக்கிரம ஆட்சிக்கும், கொட நாடு கொலை சம்பவம், பொள்ளாட்சி சம்பவம் என அனைத்திற்கும் காவலாளியாக உள்ளார். இந்த தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மோடி சர்வாதிகாரி, எடப்பாடி உதவாக்கரை.
கலைஞர் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அப்போது அவர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஏழைகளின் முகம் மலர்ந்திருந்தது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து, மாற்றுதிறனாளிகள், திருநங்கைகளுக்கு நல வாரியம், உழவர் சந்தை, முதல்பட்டதாரிக்கு கல்வி உதவி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கலைஞர் செயல்படுத்தினார். மத்தியில் காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்த போது காங்கிரஸ் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியது.
மத்தியில் உள்ள மோடி அரசு 5 ஆண்டுகளில், தமிழகத்தில் அதிமுக 8 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தார்கள். இந்த ஆட்சியில் தமிழகம் 50 வருடம் பின் நோக்கி சென்றுள்ளது. இந்து பத்திரிகை ரபேல் ஊழல் வழக்கு பற்றி எழுதி இருக்கிறார்கள். இது தவறு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் இந்து பத்திரிகை பாரம்பரிய பத்திரிகை அவர்கள் தவறாக செய்தி வெளியிடமாட்டார்கள் என்று கூறி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நான் தேர்தல் பிரச்சாரத்தில் 3 கேள்விகளை முன் வைக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிது. கொடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி சம்பவம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று விஷயங்கள் மீது விசாரணை நடத்தி குற்றவாளிகளை ஜெயிலுக்கு அனுப்புவது எனது முதல் வேலை.
கலைஞர் இல்லாமல் முதல் முதலாக தேர்தலை சந்திக்கிறோம். அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவர் மகனாக உங்கள் முன் ஆதரவு கேட்டு நிற்கிறேன். அவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இந்த தொகுதியில் போட்டியிடும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற செய்ய வேண்டும். இதுபோல கடலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ரமேஷையும் வெற்றி பெற செய்யுங்கள்” என்று பேசினார்.