அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அமமுக துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் வருகிற 25ஆம் தேதி நடக்க உள்ளது. கரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களைக் காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தார். இதுவரை யாரையும் அவர் சந்தித்து ஆலோசிக்கவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை. அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார். அதற்கான சட்ட நடவடிக்கைகளிலும் சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்போ, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் டிடிவி தினகரன் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டியுள்ளார். அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் இதுவரை நேரில் வந்து சந்திக்கவில்லை என்பதாலும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சசிகலாவை அமமுகவினர்தான் வரவேற்றார்கள் என்பதாலும் டிடிவி தினகரன் கூட்டியுள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் சசிகலா கலந்துகொள்வாரா என்ற விவாதம் நடந்து வருகிறது.
இதுகுறித்து அக்கட்சியினரிடம் விசாரித்தபோது, இந்தப் பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் மட்டுமே கேட்கப்படும் என்று தெரிகிறது. அமமுக தனித்துப் போட்டியிடுமா? யாருடன் கூட்டணி அமைக்கும்? எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவாதம் நடக்காது என்று தெரிகிறது. அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்குமாறு பாஜக தரப்பிடம் பேச்சு நடந்து வருவதாலும், அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகள் நடந்து வருவதால், இதில் கலந்துகொண்டால் சிக்கல் ஏற்படும் என்பதாலும் பொதுக்குழுவில் சசிகலா கலந்துகொள்ளமாட்டார், புறக்கணிப்பார் என்று தகவல் வெளியாவதாக தெரிவிக்கின்றனர்.