முதல்வர் ஸ்டாலின், மக்களின் கேள்விகளை உங்களின் ஒருவன் பகுதிகளில் கேட்கலாம் எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து உங்களில் ஒருவன் பகுதியில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில், இன்று உங்களில் ஒருவன் பகுதியில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வரும் முதல்வர் ஸ்டாலினிடம், “ஆளுநர் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்திருக்கிறது. அதற்கு ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என்று முதல்வர் பதிலளித்தார்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது குறித்த கேள்விக்கு, “பாஜக எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை; நேரடியாகவே மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் மணீஷ் சிசோடியாவின் கைது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறது பாஜக. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மணீஷ் சிசோடியா கைது குறித்து பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலம் தான் வெல்ல நினைக்க வேண்டும்; விசாரணை ஆணையத்தின் மூலம் அல்ல” என்று பதிலளித்தார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்காமல் மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.