விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. மேலும் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார்.
அதே சமயம் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம், ‘பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது’ என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார். இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கணிமொழி சென்னை விமான நிலையட்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதனால் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கான எல்லா உரிமையும் இருக்கிறது. எனவே அது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சியின் பரிசாக மக்கள் நிச்சயமாக திமுகவிற்கு வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.