அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி சார்பாக பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் திமுகவை விமர்சித்ததோடு காலணியை எடுத்துக்காட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக திமுகவின் ஐ.டி விங் தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''என் கட்சியில் 90 விழுக்காடு இந்துக்கள்தான் என்று சொன்னது நானா... அவரா... நீங்களே சொல்லுங்கள். அப்பொழுது நீங்கள் தான் 90 விழுக்காடு சங்கி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பிஜேபி வந்துரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தீர்கள். பிஜேபி வராமல் இருப்பதற்கு நீங்கள் செய்த வேலை என்ன? வெறுமனே கட்டமைப்பது பாஜகவின் பீ டீம் என்று போகிற போக்கில் திரும்பு திரும்ப அதையே பேசிக் கொண்டிருப்பது. இதுதான் திராவிட ஃபிராடு. அவர்களுடைய வேலையே இதுதான். காலம்காலமாக போய் பேசி அதையே கட்டமைத்து அதை உண்மை போல ஆக்குவது தான் அவர்களுடைய வேலை. அங்கிருந்துதானே நான் வந்திருக்கிறேன் என்ன பண்ணுவாங்க என்று எனக்கு தெரியாதா? அதனால்தான் நீங்கதான் உண்மையான சங்கி என சொல்ல வேண்டிய நிலை வருகிறது. தேவையில்லாமல் சங்கி சங்கி என்றெல்லாம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் வெறுப்பு வருமா வராதா... நானும் மனுஷன் தானே. இன்று பொறுப்பும் கடமையும் கையளிக்கப்பட்டிருப்பதால் பொறுமையாக இருக்கிறேன்.
மதவாதத்திற்கு எதிரானவர்கள் என்கிறீர்கள் ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வில்லை. அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால்தானே. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்த நீங்கள் இஸ்லாமியர் என்பதாலேயே விடுதலை செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய பாசிசம். எவ்வளவு பெரிய மதவாதபோக்கு. ஆனால் வெளியில் நீங்கள் சொல்லும்போது மதவாதத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்வீர்கள். முதல்வரே பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது 'அப்பாவி இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்காவது எனக்கு வாக்கு தாருங்கள்' என பேசியுள்ளார். வாக்கும் தந்தாச்சு ஏன் விடுதலை செய்யவில்லை. சாதி ஆணவப்படுகொலை என்பதை தமிழ் படுத்தினேன். சாதி ஆணவம் என்று சொல்கிறீர்கள் அதை தமிழில் சொல்லுங்கள்... தமிழன் தமிழில் பேசுவதில் என்ன பிரச்சனை. கன்னியாகுமரியில் நடந்த கொலைக்கு நான் ஒரே ஒருத்தன் மட்டும் தான் குரல்கொடுத்திருந்தேன். யாராவது ஒருவர் இதைப் பற்றி பேசி இருந்தார்களா? ஆணவப்படுகொலையை நான் என்னவோ ஆதரித்துக் கொண்டிருப்பதுபோல் சொல்கிறீர்கள். 'சாதி தமிழ் இல்லை தமிழனுக்கு சாதி இல்லை' என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் பிற கட்சிகளை எதிர்ப்பதை விட திமுகவை தான் அதிகமாக எதிர்க்கிறீர்கள் என கேள்வி எழுப்ப,
''அப்படித்தான் எதிர்ப்பேன்... அப்படித்தான் தம்பி எதிர்ப்பேன்... காரணம் திமுக எனது இனத்தை கொன்ற துரோகி. கலைஞருக்கு எங்க அண்ணனை பிடிக்காது. எனக்கு கலைஞரை பிடிக்காது போதுமா... என் இனத்தை கொன்றது காங்கிரஸ்... கூட நின்றது திமுக... அதை வேடிக்கை பார்த்தது அதிமுக-பாஜக எனவே எல்லாருமே எனக்கு எதிரிதான். சம தராசில் வைத்து தான் நான் சண்டை போடுவேன். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் போரை நடத்தியது காங்கிரஸா இல்லையா. மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவர்கள். அடுத்தவர்கள் எல்லாம் சொல்லி தெரிந்து கொள்ளக்கூடிய இடத்தில் நான் இல்லை நானே சான்று. எந்த அளவிற்கு கலைஞர் தமிழினத்திற்கு துரோகம் செய்தார் என்று தெரியும். அதிமுக சரியில்லை ஆனால் அதிமுகவை பிரசவித்த தாய் திமுக. மோடி சரியில்லை சரி, அந்த மோடியை ஆட்சியில் உட்கார வைத்தது யாரு... காங்கிரஸ் 10 ஆண்டுகால அதிகாரத்தை சரியாக, ஒழுங்காக, முறையாக நிர்வாகத்தை செய்திருந்தால் மோடி எப்படி வருவார். நீ செய்த அயோக்கியத்தனத்தால் வந்த குழந்தைதான் மோடி. பாஜக இவ்வளவு பெரும்பான்மையுடன் வெல்வதற்கு காரணமே காங்கிரஸ் தான். எதை எதிர்க்க வேண்டும் எதை எதிர்க்கக் கூடாது என்பதை நாங்கள் தான் முடிவு எடுப்போம்'' என்றார்.