ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், சபாநாயகரே ஒரு முடிவை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் ஒரு பிரச்சினையில் ஒரு தீர்ப்பை கூறி, அதில் திருப்தி இல்லையென்றால் அதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடலாம். அதேசமயம், சபாநாயகர் ஒரு விவகாரத்தில் ஒரு முடிவையே எடுக்காத நிலையில், அதுபற்றி அவர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று யாரும் நீதி மன்றத்தில் முறையிட முடியாது என்று நக்கீரனில் ஏற்கனவே கூறியிருந்தோம். இதைத்தான் தற்போது உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த வழக்கைத் தொடுத்த தி.மு.க. தரப்புக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் அதிமுகவிற்கு ஏற்பட்ட சிக்கலில் முதல்வர் எடப்பாடி தரப்பு தப்பி விட்டதாக உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மீதமிருக்கும் ஆட்சிக் காலத்தையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆட்சி நடத்தி விடலாம் என்று எடப்பாடி நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இத்தனை நாளாக இந்த வழக்கால் பதவி குறித்து அச்சத்தில் இருந்த ஓ.பி.எஸ். தரப்பும், தற்போது தீர்ப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் அந்த தீர்ப்பால் எடப்பாடி மீதான விமர்சனத்தையும் கொண்டு வர வைத்துள்ளது என்கின்றனர். பள்ளிகளில் காலை நேர சத்துணவு வழங்குவது போன்ற முக்கியமான அறிவிப்பை எல்லாம், முதல்வர் எடப்பாடியே 110 விதியின் படி தனியாக அறிவிப்பதாக சொல்கின்றனர். அதே சமயம் தனது 10 ஆவது பட்ஜெட்டை ஓ.பி.எஸ். சமர்ப்பிக்கும் போது மட்டும், அதில் எந்த சிறப்பான திட்டமும் இல்லாத பட்ஜெட்டாக அதை தாக்கல் பண்ண வைக்கிறார் எடப்பாடி என்றும் கூறிவருகின்றனர். எதிர்க்கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டை படித்துவிட்டு நாம் மட்டும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கணுமான்னு? ஓ.பி.எஸ். தன் சகாக்களிடம் வருத்தப்படுவதாக சொல்கின்றனர்.
மேலும் ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த 11 பேரில் ஓ.பி.எஸ்.சுக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் மட்டும்தான் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக மற்ற ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை எடுத்துக்கூறி மற்றவர்களுக்கும் எந்த அதிகாரமும் கொடுக்காமல் வைத்திருந்தார். இப்போது இந்த வழக்கில் ரூட் கிளியர் ஆனதால் அவங்களும் மந்திரி பதவிக்கு போட்டி போட்டு கொண்டுள்ளனர். அதோடு, அமைச்சரவையில் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 31 ஆக இருக்கிறது. இதை அதிகபட்சம் 34 வரை ஆக்கமுடியும் என்பதால், மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளைத் தங்கள் தரப்புக்குக் கொடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து எடப்பாடியிடம் இது குறித்து பேசுங்கள் என்று ஓ.பி. எஸ்.சுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.