கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டி பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள், திமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஓயாது உழைக்க கூடிய முதலமைச்சர் பொறுப்பேற்று முதல் 5 கையெழுத்து இட்டார். அதில் கரோனா நிவாரண நிதி நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனை முதல் கையெழுத்திட்டு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்கப்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழு, நகைக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்துள்ளார். மற்றும் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்திலேயே 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்வில் விளக்கேற்றியவர் நம்முடைய முதலமைச்சர்” என்று கூறினார்.