
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.