காவிரி பிரச்சனை பெரிதாவதற்கு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நிதிஉதவி, வேலை வாய்ப்பு வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்கும். யாரும் உணர்ச்சி வசப்படாமல் மனஉறுதியுடன் போராடவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்று ஜெயலலிதாதான் அடித்தளம் அமைத்தார்.
மற்ற கட்சிகளை அழைத்து போராடும் மு.க.ஸ்டாலினிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறேன். 2007-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வந்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழுவை அமைத்து இருக்கலாம். ஆனால் அவற்றை செய்ய தவறிவிட்டனர்.
காவிரி பிரச்சனை பெரிதாவதற்கு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம். 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று நடுவர் மன்ற தீர்ப்புக்கு அரசாணை பெற்றார். அதை மறந்துவிட்டு பிரச்சினைக்கு வலுசேர்க்க மாயையாக போராடி வருகிறார்கள்.
தற்போது மத்திய அரசு காலஅவகாசம் கேட்டாலும் இறுதியில் நல்ல தீர்வு வரும் என உறுதியாக நம்புகிறோம். உரிமைக்காக போராடுபவர்கள் எந்த வழியை தேர்ந்து எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது.
அ.தி.மு.க. எப்போதுமே அறவழியில்தான் போராட்டம் நடத்தும். காவிரிக்காக இப்போது நடக்கும் போராட்டங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில்தான் இருந்தது. எதிர்கால சந்ததியினர் இப்படிப்பட்ட போராட்டங்களை கையில் எடுத்தால் என்னாகும்? என்பதை நினைத்து பார்க்கவேண்டும். இவ்வாறு கூறினார்.