தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் அனைத்தையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது திமுக.
கரோனா வைரஸை பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய - மாநில அரசுகள். குறிப்பாக, கூட்டமாக மக்கள் ஒன்று சேர்வதைத் தவிர்க்குமாறும், இதற்காகத் தனித்து இருங்கள் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தி வருகிறது. ஒரு நாள் சுய ஊரடங்கையும் நடத்தி முடித்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்துமாறு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது மோடி அரசு.
இதே போன்று பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, சட்டமன்ற கூட்டத்தொடரை விடாப்பிடியாக நடத்தி வருகிறது. கூட்டத்தொடரை ஒத்திவைக்குமாறு எடப்பாடி அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், அதை அலட்சியப்படுத்திய முதல்வர் எடப்பாடி, சபாநாயகருடன் ஆலோசித்து, ஏப்ரல் 9 வரை நடக்கவிருந்த கூட்டத்தொடரை மார்ச் 31-க்குள் முடிக்க தீர்மானித்து அதற்கேற்ப நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்துள்ளனர்.
ஆனால், இதனை ஏற்காத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டத்தொடரை முழுமையாக ஒத்திவைக்க மீண்டும் வலியுறுத்தினார். சபாநாயகர் இதனை ஏற்காத நிலையில், கூட்டத்தொடரை முழுமையாகவும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தையும் புறக்கணிப்பதாக சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அனுப்பியிள்ளார் திமுக கொறடா சக்ரபாணி!
இதனைத் தொடர்ந்து காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்தச் சூழலில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க முடிவுசெய்துள்ளார் சபாநாயகர் தனபால்!