Skip to main content

“மொழித் திணிப்புக்கு இடந்தராமல் தமிழைக் காப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

Published on 03/03/2025 | Edited on 03/03/2025

 

CM MK Stalin says We will protect Tamil without giving way to language imposition

மொழித் திணிப்புக்கு இடந்தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள 6வது கடிதத்தில், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர். பா.ஜ.க.வும், பா.ஜ.க. கூட்டணியும் ஆட்சி செய்கின்ற வட இந்திய மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? ஆளுநரிடம் பதில் இருக்காது. அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது. தென்னிந்திய மொழிகளுக்காகப் போலிக் கண்ணீர் வடிக்கும் ஆளுநர் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை தராமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியவர். 'தமிழ்நாடு' என்ற பெயரைச் சிதைக்க நினைத்தவர்.

உலகப் பொதுமறையான திருக்குறளைப் படைத்து, தமிழின் உலக அடையாளமாகத் திகழும் அய்யன் திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசிக் கறைப்படுத்தியவர். தமிழர்கள் அனைவரின் கண்டனத்திற்கும் ஆளானவர். நவோதயா பள்ளிகள் என்ற பெயரிலும் அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் வாயிலாகவும் ஒன்றிய அரசின் அலுவலகங்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி 1986ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டபோது கலைஞரின் ஆணைக்கிணங்க களம் கண்ட திமுக படையில் முன்வரிசையில் நின்றது உங்களில் ஒருவனின் தலைமையிலான இளைஞரணி.ரயில் நிலையங்கள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிறுவனம் என எங்கெல்லாம் இந்தி எழுத்துகள் கண்ணில் பட்டதோ அங்கெல்லாம் அதனைத் தார் பூசி அழித்தது இளைஞர் அணியின் தமிழ்ப்பட்டாளம். இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நானும் இந்தி எழுத்துகளை அழித்து, எதிர்ப்புணர்வைக் காட்டினேன்.

ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடு ராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்?. ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது?. அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டில் இருப்பது மொழிச் சமத்துவம். ரயில்வேயிலும் ஒன்றிய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு. 1986ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், ‘ஹிட்லர்’ ஆட்சியில் ஜெர்மன் மொழி திணிக்கப்பட்டதை எதிர்த்து செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு உருவானதையும், ஆங்கில மொழித் திணிப்பை எதிர்த்து அயர்லாந்து மக்கள் நடத்திய தீர்மிகு போராட்டத்தையும், பங்களாதேஷ் எனும் நாடு உருவானதற்குக் காரணம் பாகிஸ்தான் அரசின் மொழித் திணிப்பே என்பதையும், இலங்கையில் சிங்கள மொழி ஆதிக்கம்தான் அங்குள்ள தமிழர்களைத் தனி நாடு கேட்கப் போராட வைத்திருப்பதையும் எடுத்துரைத்து, 'அரசியல் சட்டத்தின் 17ஆம் பகுதியில் ஒரு பிரிவை ஒரு தாளில் எழுதிக் கொளுத்துகின்ற போராட்டத்தை நம் தலைவர் அறிவித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட போராட்டத்தில் கொளுத்துகின்ற அந்தத் தீ. இன்றைக்கு இந்தித் திணிப்பை நடத்திக்கொண்டிருக்கும் மோசடிக்காரர்களின் எண்ணங்களுக்கு நாம் வைக்கும் எழுச்சித் தீ" என முழங்கினேன். மாநிலமெங்கும் தீ பரவியது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றேன். இனமானப் பேராசிரியர் பெருந்தகை உட்பட திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரின் பதவியைப் பறித்தார் அ.தி.மு.க அரசின் அன்றைய பேரவைத் தலைவர். சிறை கண்ட கலைஞருக்கு, கைதிக்கான கட்டம் போட்ட சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிவித்து அவரது கையில் தட்டும் குவளையையும் வழங்கினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். தமிழே உயிரெனக் கொண்ட தலைவர் சிறைக் கொடுமைகளைச் சிரித்தபடியே எதிர்கொண்டார். பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித் திணிப்புக்கு இடந்தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என்பதில் அப்போதும் இப்போதும் உறுதியாக இருக்கிறது தி.மு.க.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்