Skip to main content

'கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும்'- வைகோ வலியுறுத்தல்!

Published on 06/03/2022 | Edited on 06/03/2022

 

Karnataka's attempt must be thwarted- Vaiko insists!

 

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும் கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என வலியுறுத்தி வருகிறது.

 

கடந்த மக்களவை கூட்டத்தில் மேகதாது அணைக்கு எப்பொழுது அனுமதி அளிப்பீர்கள் என கர்நாடக எம்.பி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய அரசு சார்பில், 'சம்பந்தப்பட்ட தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படும்' என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் அத்துறையின் அமைச்சர் துரைமுருகன் வாயிலாக அறிக்கை வெளியிடப்பட்டது.

 

அதில், 'மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், எந்தவித ஒப்புதல் பெறாமலும் அணை கட்ட நிதி ஒதுக்குவது நியமாகாது. மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Karnataka's attempt must be thwarted- Vaiko insists!

 

இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக நிதி ஒதுக்கியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'மேகதாது விவகாரத்தில் கர்நாடக முயற்சியை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு கர்நாடகாவிற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதால் கர்நாடகா அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய்  நிதி ஒதுக்கியுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்