நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் பொதுப் பிரிவில் 15 பேருக்கும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவில் 24 பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். சசிதரூர் திருவனந்தபுரத்திலும், கே. முரளிதரன் திருச்சூர் தொகுதியிலும், கே.சி. வேணுகோபால் ஆழப்புலா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த் காவன் தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல் போட்டியிடுகிறார். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் பெங்களூரு புறநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், “மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரமான பாதையில் செல்கிறோம். ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை மணிப்பூரில் துவங்கி குஜராத்தை அடைந்துள்ளது. மும்பையில் நிறைவடைய உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.