Skip to main content

"காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானின் குரலை எதிரொலிக்கிறார்கள்" - ஜே.பி.நட்டா

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

bjp national president jp nadda press statement

 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு துவங்கியதிலிருந்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும் வருகின்றனர். இதனால் தொடர்ந்து 5 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி உள்ளன.

 

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா மோடி தலைமையில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அப்படி இருக்கையில் வெளிநாட்டில் ராகுல் காந்தி இந்தியாவைப் பற்றி இழிவாகப் பேசி உள்ளார். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று அமெரிக்க ஐரோப்பாவின் தலையீட்டைக் கோருவது போன்ற வெட்கக்கேடான செயல் வேறு எதுவும் இல்லை. நமது நாட்டை ஆட்சி செய்த நாட்டிலிருந்து வெளிநாடுகளின் இத்தகைய தலையீட்டைக் கோருவது துரதிஷ்டமான செயல் ஆகும். ராகுல் காந்தி பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் ஆகும். மக்களால் நிராகரிக்கப்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டத்தின் நிரந்தர அங்கமாக ராகுல் காந்தி மாறிவிட்டார். வெளிநாட்டுச் சதிகாரர்களுடன் அவர் கைகோர்த்துள்ளார். சுதந்திர இந்தியாவில் எந்த தலைவர்களும் இதற்கு முன்பு இதுபோன்ற செயல்கள் செய்ததில்லை. இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

இந்திய விரோத சக்திகளுக்கு இந்தியாவில் வலிமையான அரசு ஆட்சி செய்தாலே பிரச்சனை தான். பல்வேறு நிர்பந்தத்தின் அடிப்படையில் செயல்படும் பலவீனமான கூட்டணி ஆட்சியைத் தான் இவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் தாங்கள் நினைக்கும் வகையில் இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். அத்தகைய சதியின் ஒரு அங்கமாக காங்கிரஸ் கட்சியினரும், இடதுசாரிகளும் மாறிவிட்டனர். இந்திய விரோதியான ஜார்ஜ் சோராசின் குரலில் ராகுல் பேசி வருகிறார். தேச விரோத காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானின் குரலை எதிரொலிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்