தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பை அடைந்திருக்கிறது. பிரதானக் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்யாமல் இழுபறியிலேயே உள்ளது. அதேபோல், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க.வுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொகுதிப் பங்கீட்டில் இழுபறியே நீடிக்கிறது.
பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தரப்பில் 18 சட்டமன்றத் தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதில், மேலும் கூடுதலாக 20 முதல் 22 சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க. ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க தலைமை. மேலும் தி.மு.க.- வி.சி.க. இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதிலும் குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தி.மு.க. தரப்பில் நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் இரட்டை இலக்க சட்டமன்றத் தொகுதிகளை வழங்க வேண்டும் என இரு கட்சிகளும் தி.மு.க. தலைமைக்குக் கோரிக்கை விடுத்தன. ஆனால், தி.மு.க. தரப்பு இரு கட்சிக்கும் தலா 6 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியது.
இதனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சென்னையில் தி..நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஒன்றாகக் கூடி ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பிறகு கூடுதலாகக் கேட்போம், கொடுத்தால் வாங்குவோம் இல்லை என்றால் அரசியல் நாகரீகம் கருதி தி.மு.க. கொடுக்கும் இடங்களைப் பெற்று அமைதியாக போட்டியிடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (05/03/2021) சென்னை வரவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து, அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 10 சட்டமன்றத் தொகுதிகள் என்பது கலைஞர் காலத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வரும் வழக்கம். இந்த, 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற காரணத்தைக் கூறியே இடங்களைக் குறைப்பது என்பது அரசியலில் சுயநலப் போக்கு அதிகமாகி விட்டதைக் காட்டுவதாக கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள்.