தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பிந்தைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (05/03/2021) திருவல்லிக்கேணியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது; "நான் இந்தி ஒழிக என்று சொல்ல வரவில்லை; தமிழ் வாழ்க என்று சொல்வதுதான் என் வேலை. நான் வீழ்த்த வரவில்லை; வெல்ல வந்திருக்கிறேன்" என்றார்.
அதைத் தொடர்ந்து சென்னை கொளத்தூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "காங்கிரஸின் இருப்பை இல்லாமல் செய்து கொண்டிருப்பவர்கள்தான் 'பி' டீம். நான் கூறுகிறேன்; நான் விற்பனைக்கு அல்ல. மக்கள் நீதி மய்யமும் விற்பனைக்கு அல்ல. மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைக் கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர். இவ்வளவுநாள் வன்னியர்கள் தெரியவில்லையா? தேர்தல் வரும் போது தான் உள்ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்" என விமர்சித்தார்.
முன்னதாக, கமல்ஹாசன் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மய்யம் பதிப்பகம் அரங்கிற்குச் சென்று புத்தகங்களைப் பார்வையிட்டார். பின் புத்தகக் காட்சி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன், இயக்குனர் அமீர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், பதிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.