குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஓபிஎஸ் குஜராத் சென்றுள்ளார்.
குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 156 தொகுதிகளில் வென்று சாதனை வெற்றியைப் பெற்று உள்ளது. அதேபோல் காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வென்று மிகமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 12% வாக்குகளுடன், 5 இடங்களில் வென்று மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் குஜராத் காந்தி நகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கும் பூபேந்திர சிங் படேலுடன் இணைந்து 20 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுடன் பாஜக ஆளும் மாநிலத்தை சேர்ந்த முதல்வர்களும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் சென்றார். அவர் அகமதாபாத் சென்ற போது அவரது ஆதரவாளர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். அஹமதாபாத்தில் ஓபிஎஸ் பிரதமரையும் அமித்ஷாவையும் சந்திப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் ஜி20 மாநாட்டிற்கான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.