மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதையடுத்து 2020 ஆம் ஆண்டு பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின்படி, அப்போதைய முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி தரார்த்தியா சிந்தியா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார்.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் காங்கிரஸ் கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்புரில் காங்கிரஸ் சார்பில் கடந்த 12 ஆம் தேதி பொதுக்கூட்டமும் பேரணியும் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டம் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புது உத்வேகத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் பாஜகவும் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் வேலைகள் தொடங்கி உள்ளது. இதையடுத்து மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக கட்சி தொண்டர்களிடம் காணொளி மூலம் உரையாற்ற உள்ளார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22 ஆம் தேதி பாலகாட்டில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா வரும் 30 ஆம் தேதி கர்கோன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.