திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தி.மு.க. சார்பில் 10 லட்சம், அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம், தமிழக அரசு சார்பில் 10 லட்சம், காங்கிரஸ் சார்பில் 10 லட்சம், தே.மு.தி.க. சார்பில் 1 லட்சம் என இழப்பீடு தொடர்கிறது. மேலும் பலர் இழப்பீடு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் குழாயில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 10 லட்ச ரூபாய் தி.மு.க. சார்பில் நிதி உதவியையும் செய்தார். இந்த நிலையில் பா.ஜ.க. தரப்பு, யாராக இருந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பது என்றால் காசோலை வழியாகத்தான் கொடுக்கமுடியும். இந்த நிதி வரன்முறைக்கு மாறாக கொடுத்த ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வருமானவரித்துறைக்கு புகார் அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.