ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் ஜாமீன் கோரி நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.விசாரணையின் முடிவில் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கே.எஸ்.அழகிரியைக் கொண்டு வந்த ப.சி. தரப்பு, இப்போது அவரை மாற்ற வேண்டும் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது.
ப.சி.யின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் கே.எஸ்.அழகிரி. ஆனால், ப.சி. கைதான நேரத்தில் போராட்டத்தை ஆர்வமாக முன்னெடுக்கவில்லை. அதேபோல், ப.சி. விடுதலையாகி சென்னை வந்த போதும் அவரை வரவேற்க, கூட்டத்தைத் திரட்டும்படி கார்த்தி சிதம்பரமே கேட்டுக்கிட்டும், அழகிரி கண்டுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், ப.சி.யின் எதிர்ப்பாளரும் கே.சி. வேணுகோபால் கொடுத்த ஆலோசனைப்படி தான் அழகிரி நடந்துகிட்டதாக கூறுகின்றனர். இதனால் அழகிரி மீது கடும் கோபத்தில் இருக்கும் ப.சி. ஆதரவாளர்கள் அழகிரியை மாற்றியே தீர வேண்டும் என்று டெல்லி தலைமைக்குப் புகார் மனுக்களை அனுப்பியதாக சொல்கின்றனர். கார்த்தி சிதம்பரமோ, தமிழக காங்கிரஸுக்கு நானே தலைவராக வருகிறேன் என்று கூற, அதை வழிமொழிந்த ப.சி.யும் தன் மகனுக்காக இப்போது வரிந்துகட்டத் தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர்.