மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 8 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது அஜித் பவாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் கவனித்து வந்த நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனில் பாட்டீலுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, பேரிடர் மேலாண்மை துறையும், அதிதி சுனில் தட்கரேக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையும், தனஞ்சய் முண்டேவுக்கு விவசாயத் துறையும், திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு வருவாய், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அமைச்சர்களாகப் பதவியேற்ற 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.