தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (21.06.2021) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''முக்கியமான வாக்குறுதிகள் கூட ஆளுநரின் உரையில் இடம்பெறவில்லை. பெருத்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இப்போது முதலமைச்சராக இருக்கிறார். அன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் அதற்கு மாறாக கமிட்டியை அமைத்திருக்கிறார்கள். நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சட்டமன்றத்தில் பேசும்போதும், தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை. அதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள் என ஊடகத்தின் வாயிலாக தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால் தேர்வு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, தேர்வு முடிந்த பிறகு ஒரு பேச்சாக காண முடிகிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாகத்தான் அவருடைய செயல்பாடு இருக்கிறது.
தங்களது ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம். அதற்கான ரசீதையும் கொடுத்துவந்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைத்து 44 நாட்கள் ஆன பின்பும், முழுமையாக விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர்க் கடனையும் ரத்து செய்த அந்த ரசீதும் வழங்கப்படவில்லை. அதோடு தற்போது பருவமழை துவங்கிவிட்டது. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நடவு செய்ய ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், அவர்களுக்குப் புதிய பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டியது அவசியம். அதுவும் இன்னும் முழுமையாக தெரியவில்லை. இதனால் விவசாயிகள் அவர்களது பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.