தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதே சமயம் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தி அதிமுக சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி (21.12.2024) விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது சி.வி. சண்முகம் பேசுகையில், “நிவாரண பணியின் போது கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் என ஒருத்தர் கூட கண்ணில் படவில்லை. எங்கேயும் இவர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை. என்ன அச்சு?. இது என்ன நிர்வாகம்? ஒரு இடங்களில் கூட ஒரு அதிகாரிகள் இல்லை. முதலமைச்சர் பின்னாடியே செல்கிறார்கள். துணை முதல்வர் பின்னால் செல்கின்றனர். முதல்வர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்து போய் இருக்கிறது. மக்களை யார் காப்பாற்றுவது.
ஒரு இடத்தில் கூட சாப்பாடு இல்லை. உணவு இல்லை. இது குறித்துக் கேட்டால் கணக்கு இல்லை நிவாரணம் ஊரில் யாராவது நிவாரணம் கொடுத்தால், அரசு நிவாரணம் வழங்கியதாகக் கிராம நிர்வாக அலுவலர்கள் போட்டோ எடுத்து அனுப்பி விடுகின்றனர். எல்லா ஊர்களையும் இந்த போட்டி சம்பளம் நடைபெற்றது. நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து போய் உள்ளது. சாத்தனூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் இரவு 12:45 மணிக்கு 5ஆம் கட்டமாக எச்சரிக்கை விட்டு இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் இந்த அறிவிப்பை விடுத்த ஐந்து நிமிடத்தில் நீர் திறந்து விடப்பட்டது. உண்மையில் 3 லட்சத்திற்கும் மேலான கன அடி தண்ணீர் அந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையும் தண்டராம்பேட்டை வட்டாட்சியருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு வழங்கியது. ஆனால் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. எனவே வெள்ள நிவாரணம் வழங்குவதில் திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது. எனவே ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.” எனப் பேசினார்.