
கேரள மாநிலத்திற்குச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார்.
தென்மண்டல கவுன்சிலில் 30-வது கூட்டம் கேரளா மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்பதற்காக நேற்று திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு திராவிட மாடல் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். தொடர்ந்து இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது முல்லைப் பெரியாறு அணை, நதிநீர் பங்கீடு, ஜி எஸ் டி வரி விதிப்பு முறை போன்ற விவகாரங்கள் தொடர்பாக இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.