
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது என பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சி.வி.சண்முகத்தின் ஆலோசனை பாஜகவிற்கு தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அவர், “அஇஅதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி.வி.சண்முகம் பாஜகவுடன் திமுக கூட்டணி வரும் என்றும், திமுகவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை தலைவர் அண்ணாமலை தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாகப் போராடி வரும் பாரதிய ஜனதா கட்சி, எப்போது யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரையோ ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.
அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை. மேலும், காவித் துண்டு போட்டவன், பாஜக தொண்டன் என்றெல்லாம் ‘நிதானமில்லாமல்’ பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்றத் தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பாஜகவை குறித்த விமர்சனங்களைத் தவிர்ப்பார் என்று கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.