Published on 07/08/2019 | Edited on 07/08/2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்றினார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். நிலைமை சரியான பின்பு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த நிலையில் மக்களவையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்களை மத்திய அரசு வீட்டு காவலில் வைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, உமர் அப்துல்லாவை வீட்டு காவலில் வைத்துள்ளீர்கள். அவர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்படவில்லை என அமித் ஷா கூறினார். அமித்ஷா தெரிவித்தது பொய் என்று கதவை உடைத்து வெளிவந்து பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், தனது மகன் உமர் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். வீட்டின் கதவை உடைத்து கொண்டு வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வெதெல்லாம் பொய் என்று பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.