தமிழக அமைச்சரவையின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் சட்டசபை கூட்டம் தொடங்கும். இது தொடர்பாகவும், சட்டசபை நிகழ்வை தொடங்கி வைக்க கவர்னருக்கு அமைச்சரவை மூலம் அழைப்பு அனுப்பப்படுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தல் முடிவு செய்வார்கள்.
மேலும், அனைத்து தரப்பினராலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் 7 தமிழர் விடுதலை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு மேகதாது பிரச்சனை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.