அண்மையில் அதிமுகவின் 'பொன்விழா எழுச்சி மாநாடு' மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று வெளியான அறிவிப்பின்படி அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவின் தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 04.09.2023 (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம், தேதி மாற்றப்பட்டு 10.09.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழா மற்றும் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள் செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டங்கள் தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 15 ஆம் தேதி தாம்பரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.