கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்ட ஒற்றுமைப் பயணத்தின் போதும் அதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க கர்நாடகத் தேர்தலில் பாஜக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களையும் பிரச்சாரத்திற்கு இறக்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பாஜக தலைவர்கள் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் தேசியத் தலைவர்களும் தேர்தலில் தீவிரம் காட்டும் சூழலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடகத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் மே முதல் வாரத்தில் பரப்புரையில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.