
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 - 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இதனையடுத்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து 2025 - 2026ஆம் ஆண்டிற்கான முன்பணம் மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (25.02.2025) பகல் 12 மணிக்கு 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் அறிக்கைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் தொடர்பான அரசின் நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு 2025 - 2026ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.